BREAKING NEWS

Sports

Health

sex

Tuesday 9 September 2014

ரூ.30,000 கோடி பயங்கரவாத எதிர்ப்பு நிதி: அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலைக் கோருகிறார் ஒபாமா


பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள, 500 கோடி டாலர் (சுமார் ரூ.30,300 கோடி) ஒதுக்கீடு செய்யப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, அதற்கான நாடாளுமன்ற ஒப்புதலைக் கோரியுள்ளார். அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் சர்வதேச அளவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஒபாமா கடந்த மே மாதம் அறிவித்திருந்தார். இதனிடையே, இராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. இரு அமெரிக்க செய்தியாளர்களை அந்த அமைப்பினர் கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். இதையடுத்து, பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதி குறித்த நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐ.எஸ். அமைப்பின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான அதிபர் ஒபாமாவின் செயல்திட்டத்துக்கு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி முக்கிய ஆதாரமாகத் திகழும். பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போராடும் நாடுகளின் கரங்களை வலுப்படுத்த இந்த நிதி உதவும். அமெரிக்கா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை முறியடிக்கும் வல்லமை மிக்க, பயற்சியும், ஆயுதங்களையும் கொண்ட கூட்டாளிகளை இந்த நிதியின் மூலம் உருவாக்க முடியும். அமெரிக்காவை விட, அமெரிக்காவுக்கு நெருக்கமான அரசுகளே தங்கள் நாட்டின் அரசியல் சூழலையும், நில அமைப்பையும் நன்கு அறிந்து வைத்துள்ளன. அந்தப் பகுதிகளிலிருந்து அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் எழும்போது, அது மிகவும் தீவிரம் அடையாமல் அந்த அரசுகளால் மட்டுமே திறம்படத் தடுக்க முடியும். இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவு கோர நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதனையும் ஒரு காரணமாக அதிபர் கூறியுள்ளார். தனக்குப் பிறகு பதவியேற்கவிருக்கும் அதிபருக்கு, இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் பலம் வாய்ந்த கூட்டாளிகளை அமைத்துத் தர ஒபாமா விரும்புகிறார் என்றார் ஜோஷ் எர்னஸ்ட். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை எதிர்கொள்வதற்கான செயல்திட்டத்தை புதன்கிழமை (செப். 10) வெளியிடுகிறார் அதிபர் ஒபாமா.
ஐ.எஸ். அச்சுறுத்தல்:
இராக் புதிய பிரதமருடன் ஆலோசனை இராக்கின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹைதர் அல்-அபாதிக்கு தொலைபேசி மூலம் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இராக்கில் புதிய அரசை அமைப்பதற்கு பிரதமர் அல்-அபாதியும், பிற இராக் தலைவர்களும் மேற்கொண்ட முயற்சிக்கு அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்தார். 

இராக் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உறுதியான நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger