BREAKING NEWS

Sports

Health

sex

Tuesday 9 September 2014

ஜம்மு- காஷ்மீர்: இன்னமும் 4 லட்சம் பேர் தவிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னமும் 4 லட்சம் பேர் சிக்கித் தவிப்பதால், அவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் முப்படை வீரர்களும் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். அப்பகுதிகளில் நடைபெற்ற மீட்புப் பணிகளில், இதுவரை 47,000-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ்.டி. கோஸ்வாமி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில், இந்திய விமானப் படையைச் சேர்ந்த 61 விமானங்களும், ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஒரு லட்சம் வீரர்களும் மீட்புப் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். ராணுவத்துக்குச் சொந்தமான 135 படகுகளும், தேசிய பேரிடர் மீட்புப் படைக்குச் சொந்தமான 148 படகுகளும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
குறைந்த அளவு படகுகளே இருப்பதால், மீட்புப் பணிகள் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, தில்லியில் இருந்து கூடுதலாக படகுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 47,227 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தோருக்கு, 7,200 போர்வைகள், 210 கூடாரங்கள், 42,000 லிட்டர் குடிநீர், 600 கிலோ பிஸ்கெட், குழந்தைகளுக்கான 7 டன் உணவு வகைகள், 1,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 563 டன் நிவாரணப் பொருள்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் போடப்பட்டுள்ளன. தில்லி, சண்டீகரில் இருந்து கூடுதலாக குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடி மருத்துவ உதவிகள் வழங்கும் பணியில், 80 ராணுவ மருத்துவக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன என்றார் அவர். வெள்ள நிலவரம் குறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவிக்கையில், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சுமார் 4 லட்சம் பேர் வரை சிக்கியிருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது' என்றனர்.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீருக்கு படப்பிடிப்புக்காகச் சென்ற மலையாள நடிகை அபூர்வா போஸ் உள்பட கேரள மாநிலத்தவர் 300 பேர், வெள்ளப் பகுதிகளில் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீநகர், தெற்கு காஷ்மீரில் வெள்ளத்தின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. அதேசமயம், அங்குள்ள "டால்' ஏரியில் வெள்ளத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், அந்த ஏரியில் இருந்து வெளியேறும் வெள்ள நீர், அருகிலுள்ள ஹஸ்ரத்பால் மசூதிக்குள் புகுந்துள்ளது. தொடர்மழை, நிலச்சரிவுகள் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை உள்பட மாநிலத்தில் உள்ள பல்வேறு சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, அந்தச் சாலைகளைச் சீர்செய்யும் பணியில் ராணுவப் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்மழை காரணமாக கடந்த 7 நாள்களாக மூடப்பட்டிருந்த ஸ்ரீநகர்-லே இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
வைஷ்ணவி கோவிலில் 25,000 பேர் வழிபாடு: ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலில் திங்கள்கிழமை முதல் பக்தர்கள் மீண்டும் வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்தக் கோவிலில் இதுவரை 25,000 பேர் வழிபாடு நடத்தியுள்ளனர். இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டோர் குறித்த தகவல்களை, அரசு இணையதளத்தில் வெளியிடுமாறு ஜம்மு-காஷ்மீர் அரசை மத்திய உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger