BREAKING NEWS

Sports

Health

sex

Saturday 27 September 2014

பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழங்களில் தரமற்ற கல்வி வழங்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தாண்டன் குழு 126 பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்தது. இதில் அடிப்படை வசதியில்லாமல் இருந்த 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை அளித்தது.
இதில், ஒரு பல்கலைக்கழகம் தனது பெயரை ‘உயர்கல்வி சிறப்பு மையம்’ என்று மாற்றிக்கொண்டது. 2 பல்கலைக்கழகங்கள் தங்களுடைய நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை அரசாங்கத்திடம் மீண்டும் திரும்ப ஒப்படைத்து விட்டன. மீதியுள்ள 41 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது 34 நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், மற்ற 7 நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்க இயலாது என்றும் பல்கலைக்கழக மானிய குழுவின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே அங்கீகாரம் ரத்து பட்டியலில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், மீண்டும் ஆய்வு நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே, முறையான ஆய்வு செய்யாமலேயே அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே பல்கலைக்கழக மானிய குழு மீண்டும் நேரில் ஆய்வு செய்து உரிய முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று வாதாடினார்.
இதனை ஏற்ற நீதிபதிகள், பல்கலைக்கழக மானிய குழு 8 வார காலத்திற்குள் பல்கலைக்கழகத்தை ஆய்வு செய்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
இதனை தொடர்ந்து மற்ற 6 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் சார்பில் இதே போன்ற மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.
விசாரணையின் தொடக்கத்தில் பல்கலைக்கழக மானிய குழுவின் சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், ‘34 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் குறித்து எந்த பிரச்சினையும் இல்லை. மீதமுள்ள 7 பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் தான் பிரச்சினைக்குரியதாக உள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால் இந்த பல்கலைக்கழகங்களில் மீண்டும் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எந்த பல்கலைக்கழகங்கள் எல்லாம் ஆய்வு செய்வதற்காக மனு தாக்கல் செய்துள்ளார்களோ அந்த பல்கலைக்கழகங்களை எல்லாம் ஆய்வு செய்து 3 மாதங்களில் சுப்ரீம் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆய்வு செய்யும்போது அந்த பல்கலைக்கழகங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தால், அவர்களுக்கு அவற்றை சரி செய்து கொள்ள கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், இடைப்பட்ட காலத்தில் இவற்றில் எந்த பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு (2015) ஜனவரி மாதம் 2-வது வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger