பழமொழிகள் என்பவை பழைய தலைமுறையினர் நம் நல்வாழ்வுக்கு விட்டுச் சென்ற அனுபவக் கூற்றாகும். பழங்காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அனுபவ முதிர்ச்சியினால் தோன்றிய இந்த பழமொழிகள், ஒரு சமுதாயத்தில் நீண்ட காலமாக புழக்கத்தில் இருந்து, பிறகு காலம் மாற மாற, அதன் அர்த்தங்களும் திரிந்து மருவி, வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவ்வாறு உருமாறி இருக்கும் ஒரு பழமொழியை இங்கே அலசலாம்.
" பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து"
இன்றையப் பொருள் :
"பந்திக்கு முந்து" என்றால் சாப்பாட்டிற்கு முந்திச் சென்று சாப்பிட்டுவிட வேண்டும். கடைசியில் சென்றால் சில வகைப் பதார்த்தங்கள் கிடைக்காது என்பதனால், பந்திக்கு முந்தவேண்டும் எனது கொள்கின்றனர்.
"படைக்குப் பிந்து" என்றால் சண்டை சச்சரவுகள் ஏற்படும் பொழுது மற்றவர்களை முன் நிறுத்திவிட்டு, நாம் பிந்திச் சென்று விடவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா ? ஆனால் இதுவே உண்மையல்ல.
உண்மைப் பொருள் :
உண்மையில் அக்காலத்தில் காலாட்படையின் ஒரு பிரிவுக்கு " பந்திப்படை " என்று பெயர். போர் நடக்கும் காலத்தில் பந்திப்படையை முன்னே செல்ல விட்டுவிட்டு, பயங்கர ஆயுதங்களைக் கொண்ட படைகளை பந்திப்படைக்கு பிந்தி செல்ல வைத்து போரை முறையாக நடத்த வேண்டும் என்பதைக் குறிக்கும் பழமொழி.
ஆக நாம் எதிராளியிடம் சண்டையிடும் போதும் கூட அதில் ஒரு ஒழுங்கு முறை இருக்க வேண்டும் என்பதை விளக்கும் மிக அருமையான பழமொழி ஆகும். இப்பழமொழிக்கு வேறு ஒரு விளக்கமும் வழக்கத்தில் உள்ளது.
பந்தியில் சாப்பிடுவதற்கு நம் வலது கை முந்தும். படைக்கு செல்லும் சமயத்தில் நம் வலது கை நாணைப் பின்னோக்கி இழுத்து அம்பை எய்யும். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அந்த அளவிற்கு அம்பு வேகமாகச் சென்று எதிரியை தாக்கும் என்பதால் , வலது கை பந்திக்கு முந்தும். படைக்குப் பிந்தும் என்று சொல்கின்றார்கள். இதுவே நாளடைவில் உருமாறி "பந்திக்கு முந்து, படைக்கு பிந்து" என்று உருவாகிவிட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.
Post a Comment